வெளிநாட்டு கணவருடன் மனைவி வீடியோ கால்; இருவரும் தற்கொலை - நடந்தது என்ன?
வீடியோ கால் பேசி முடித்து விட்டு கணவன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் வேலை
சிதம்பரம் அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வத்திற்கும் கவுரி என்ற பெண்ணுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.இந்த தம்பதிகளுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
பன்னீர் செல்வம் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். விடுமுறைகளில் வீட்டுக்கு வரும்போதெல்லாம் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டேதான் இருப்பார் என கூறப்படுகிறது.
வீடியோ கால்
இந்நிலையில் நேற்று கவுரி தனது தந்தை மற்றும் தங்கையிடம் வீடியோ கால் பேசி முடித்து விட்டு கணவரிடம் வீடியோ கால் பேசியுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதனையடுத்து, வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது கவுரி சடலமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
தற்கொலை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கணவர் பன்னீர் செல்வத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பன்னீர் செல்வம், சிங்கப்பூரில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இது தொடர்பாக அவர்களின் உறவினர்களிடம் விசாரித்த போது, "கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடக்கும். கவுரி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். ஆனால் நேற்றைய தினம் என்ன சண்டை என தெரியவில்லை" என தெரிவித்துள்ளனர்.
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.