எங்கள் குழந்தைக்கு ஜாதி,மதம் இல்லை - சான்றிதழ் பெற்ற கோவை தம்பதியினர்!
கோவையைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது குழந்தைக்கு ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றுள்ளனர்.
ஜாதி மதம் அற்றவர்
கோவை மாவட்டம் பீளமேடு காந்தி நகரை சேர்ந்த தம்பதியினர் பிரலோப்-பீனா. இவர்களுக்கு 3 வயதில் ஹாதியா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்களது குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடும் வகையில் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இதற்காக கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்களை பரிசீலித்த அதிகாரிகள் குழந்தை ஹாதியாவுக்கு ஜாதி மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கினார்.
பெற்றோர் பேட்டி
இதுகுறித்து பெற்றோர் பிரலோப்-பீனா பேசுகையில் ' இவ்வாறு சான்றிதழ் பெறுவதால் வருங்காலத்தில் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் எங்கள் குழந்தைக்கு பெற இயலாது என்று தெரிந்து தான் நாங்கள் விண்ணப்பித்தோம். இதை ஏன் வாங்குகிறீர்கள் என்று நிறைய கேள்வி கேட்டனர்.
அதிகாரிகளுக்கு இவ்வாறு சான்று அளிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசு ஏற்கனவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போது பெற்றோர் விருப்பப்பட்டால், மாற்றுச் சான்றிதழில் ஜாதி மதம் இல்லை என்று குறிப்பிடலாம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. எங்களைப் போல சான்றிதழ் பெற நிறைய பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் எப்படி விண்ணப்பிப்பது என்ற முழு விவரம் அவர்களுக்கு தெரியவில்லை. எனவே அரசாங்கம் இதுகுறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளனர்.