நாடு முழுவதும் விவசாயிகள் மறியல் போராட்டம்: ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி - உத்தரப் பிரதேச எல்லையான காஜியாபாத் ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதை தடுக்கும் வகையில் உத்தரப் பிரதேச அரசு போலீசாரை குவித்திருக்கிறது.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளது. அதனையடுத்து, இன்று பிற்பகல் அமைதியான முறையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இதனால் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள ரயில் நிலையங்களில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமான ரயில் நிலையங்களில் கூடுதலாக 20 ஆயிரம் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி எல்லையில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.