கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போன 16 போலீசார் கூண்டோடு மாற்றம்..!

Police Transfer Sales Counterfeit
By Thahir Apr 15, 2022 10:41 AM GMT
Report

சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் பணியிடை நீக்கம், போலீசார் 16 பேர் கூண்டோடு மாற்றம் செய்து உத்தரவிட்டார் தஞ்சை சரக டி.ஐ.ஜி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனைக்கு போலீசாரும் துணைபோவதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்தது.

இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் கவிதாவை, தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்,

மேலும் இதேபோல் தஞ்சை காவல் சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையில் யாரேனும் ஈடுபட்டாலோ அல்லது அதற்கு போலீசார் உடந்தை என்று தகவல் வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி கயல்விழி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் ஒன்பது பெண் போலீசார் உட்பட 16 பேர் பணியில் இருந்தனர்.

இந்நிலையில் சாராய விற்பனை தொடர்பான புகாரில் இன்ஸ்பெக்டர் கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவருக்குக் கீழ் பணிபுரிந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 பேரையும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 16 பேர் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் சீர்காழி காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.