கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
பீகாரில் பூரண மது விலக்கு கடந்த 5 ஆண்டுகளாக அமலில் உள்ளது. மது விலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கும் செயலும் அரங்கேறி வருகிறது.
இதில், அடிக்கடி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் 9 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் நவல் கிஷோர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
கோபால்கஞ்சில் கள்ளசாராயம் குடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது. பீகாரின் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சம்பரான் மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களில்,கள்ள சாராயம் அருந்தியதால், சுமார் 24 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
சம்பரான் மாவட்டத்தின் பெட்டியாவில் உள்ள தெலுவா கிராமத்தில் கள்ளசாராயம் குடித்த 8 பேர் நேற்று இறந்தனர்.
உயிரிழப்புக்கான காரணத்தை இரு மாவட்ட நிர்வாகங்களும் இதுவரை உறுதி செய்யவில்லை. கடந்த பத்து நாட்களில் வடக்கு பீகாரில் நடந்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.