2 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க தடை - அரசு உத்தரவு!
2 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இருமல் மருந்து
மத்திய பிரதேசத்தில், கலப்படமான 'கோல்ட்ரிஃப்' (Coldrif) என்ற இருமல் மருந்தை உட்கொண்டதால் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஐந்து குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா சுகாதாரத் துறை, 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை பரிந்துரை செய்யவோ அல்லது வழங்கவோ கூடாது என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைத்து சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், ரீடைலர்கள் போன்ற அனைவரும் குறிப்பிட்ட இந்த இருமல் மருந்து வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு தடை
5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பொறுத்த வரை முழுமையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் குறைவான அளவில் கூட இந்த இருமல் மருந்துகளை பெற்றோர்கள் கொடுக்கக் கூடாது. அனைத்து சுகாதார நிறுவனங்களும் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருந்துகளை தயாரிப்பதற்கான சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வழிமுறைகளை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை அவ்வப்போது சோதனைகளில் ஈடுபடும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் கர்நாடக தனியார் மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 2007 மற்றும் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945 இன் கீழ் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.