விவசாயிகளிடம் 40 ரூபாய் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்- சீமான் பரபரப்பு பேட்டி!
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நெல் கொள்முதல்
தமிழ்நாட்டு விவசாயிகள் விளைவித்துக் கொண்டுவரும் 17% குறைவான ஈரப்பதம் உடைய 40 கிலோ நெல் மூட்டைகளுக்கும், ஈரப்பதத்தினால் ஏற்படும் இழப்பினை காரணம் காட்டி 1½ கிலோ வரை கூடுதலாக எடை நிறுத்தே நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் எடுத்துக்கொள்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதாவது, சராசரியாக 1 மூட்டைக்கு 1½ கிலோவரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகின்ற வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் பிடித்தம் செய்யப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, வண்டி வாடகை என்று கூறி 1 கிலோ நெல்லுக்கு 1 ரூபாய் என ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் 40 ரூபாய் வரை நெல் கொள் முதல் நிலைய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் வேளாண் பெருமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதன்படி, விவசாயிகள் ஒவ்வொரு மூட்டை நெல்லுக்கும் 1½ கிலோ நெல்லும், 40 ரூபாய் பணமும் கொடுக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பை உறிஞ்சும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.
லஞ்சம்
ஏற்கனவே பாசன நீர்ப் பற்றாக்குறை, இடுபொருட்கள் கிடைக்கப்பெறாமை, உரம் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, பருவகால மாற்றம் எனப் பல்வேறு தடைகளைத் தாண்டி பயிர் விளைவித்தாலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால், விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி வருகின்றனர்.
இத்தகு துயர்மிகு சூழலில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஊழல் முறைகேடுகளை அரசு அனுமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைத் தடுத்து, முறையாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை சீமான் வலியுறுத்தியுள்ளார்.