ஊழலை நிரூபிக்க அவரால் முடியாவிட்டால் பதவி விலகுவாரா அமித்ஷா? நாராயணசாமி சவால்

india party bjp congress
By Jon Mar 03, 2021 03:45 PM GMT
Report

ஊழல் குற்றச்சாட்டு கூறிய அமித்ஷா மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மகளிர் காங்கிரஸார் அடுப்பு மூட்டி பஜ்ஜி சுட்டு எதிர்ப்பை தெரிவித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது - நம்முடைய அமைச்சரவையிலேயே எட்டப்பர்கள் இருந்தார்கள். அந்த எட்டப்பர்களின் சதி வேலையாலும், கோடிக்கணக்கான ரூபாயை விமானத்தில் கொண்டு வந்து கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்தார்கள்.

புதுச்சேரி மாநில திட்டத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடியை மோடி ரயிலில் அனுப்பியதாகவும், அதில்பாதியை நான் எடுத்துக் கொண்டு மீதமுள்ள தொகை சோனியா காந்திக்கு கொடுத்துவிட்டதாகவும் அமித்ஷா கூறியிருக்கிறார். இங்கு இருந்தது கிரண்பேடி. மத்தியில்இருந்தது நரேந்திர மோடி. அப்படி யானால் பணம் அரசுக்குத் தான் வரும். நாராயணசாமி கையிலா வரும்? புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடியில்லை, 15 பைசா கூட கொடுக்கவில்லை.

பாஜகவுக்கு தொகுதியில் ஆட்கள் உண்டா? விலைபோனவர்களை வைத்துக்கொண்டு தேர்தலில் நிற்கப் போவதாக கூறி வருகின்றார்கள். பாஜக வைத்துள்ள 3 நியமன எம்.எல்.ஏ.களும் டெபாசிட் இழந்தவர்கள். புதுச்சேரி மாநில மக்களைப் பற்றி பாஜகவுக்கு தெரியவில்லை. கட்சியை விட்டுசென்றவர்கள் அரசியல் வியாபாரிகள் என மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

ரூ.15 ஆயிரம் கோடிகையாடல் செய்திருந்தால், சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை கையில் வைத்திருக்கும் நீங்கள் என் மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை அமைத்திடுங்கள். ஊழலைநிரூபிக்க வில்லை என்றால் அமித்ஷா பதவி விலக தயாரா? அப்படி நிரூபித்தால் நான் அரசியலை விட்டே சென்று விடுகிறேன்.

மேடையில் நேருக்கு நேர் என்னுடன் பேச அமித்ஷா தயாரா? இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படியில்லை என்றால் காரைக்கால் நீதிமன்றத்தில் அமித்ஷா மீது வழக்கு தொடருவேன். புதுச்சேரி மக்கள் தான் முக்கியம். அவர்களுக்காக என் உயிரை தியாகம் செய்ததாக இருக்கட்டும். புதுச்சேரியின் தனித் தன்மையை காக்க தயாராக இருக்கிறோம். நிர்வாகத்தில் தலையிட்டு தினமும் தொல்லை கொடுத்தபோது எங்கு சென்றீர்கள்? இப் போது தேர்தல் சமயத்தில் வருகிறீர்கள்.

தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்டவர் தமிழிசை. தற்போது புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து முதல்வராக ஆசைப்படுகிறார். யாரிடமும் ஆலோசனை கேட்காமல் மாணவர்களுக்கு தேர்வு அறிவித்தது ஏற்புடையதல்ல என்று பேசினார்.


Gallery