அரசு மருத்துவமனையில் திருடு போன கொரோனா தடுப்பூசிகள்- எங்கு தெரியுமா?
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 320 டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் திருடு போனது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனாவைரஸை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்ப நிலையில் தயங்கிய பொதுமக்கள் தற்போது ஆர்வமாக மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசிகளை எடுத்துவருகின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், 320 டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை காணவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளது.
கன்வதியா அரசு மருத்துவமனையின் குளிர் சேமிப்பு கிடங்கிலிருந்து இந்த தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளன. ஏப்ரல் 12-ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் இந்த 320 டோஸ்களை தேடியபோதுதான் அவற்றினை காணவில்லை என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி கேமரா மட்டுமே வேலை செய்யாத இடத்திலிருந்து இந்த தடுப்பூசி திருடப்பட்டுள்ளது.
கடந்த சில வாரமாக இந்தியாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் திருடு போனது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வேளை மருத்துவமனையின் ஊழியரின் ஒத்துழைப்புடன் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதா? என போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.