மீண்டும் மீண்டுமா? தமிழகத்தில் தொடரும் கொரோனாவின் புதிய அத்தியாயம்!
தமிழகத்தின் தலைநகரில் புதிய அலை தொடங்கிவிட்டது என்றால் கூட தப்பில்லை எனச்சொல்லும் அளவுக்கு, தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல, மெல்ல தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
கொரோனா
கொரோனாவின் முதல் அலை பாதிப்பில் இருந்து எழுவதற்கு முன்பே, இரண்டாம் அலையில் சிக்கி பெரும் பாதிப்பைச் சந்தித்தது தமிழகம்.
மூன்றாம் அலை இதோ, அதோ என்று அச்சம் காட்டப்பட்டதே தவிர, அது வந்ததா, சென்றதா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில், தற்போது ஒரு புதிய அலை உருவாக வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
எச்சரிக்கை மணி அடிச்சாச்சு
அதற்கேற்ப, கடந்த ஒரு வாரமாகவே, தமிழகத்தின் தலைநகர்ச் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை சிறிது, சிறிதாக உயர ஆரம்பித்துள்ளது.
குணமடைவோரின் எண்ணிக்கையை விட, பாதிப்படைவோரின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதுதான், அச்சத்தை விரிவுப்படுத்துகிறது.
அபாய அளவை எட்டவில்லை என்றாலும், மிக, மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைத்தான், சுகாதாரத்துறையின் சார்பில் அதன் செயலாளர் ராதாகிருஷ்ணன், எச்சரிக்கை மணி அடிச்சாச்சு என எச்சரிக்கை செய்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 20 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை, தற்போது 200-யை தொடும் அளவுக்கு வந்துவிட்டது.
பல மாவட்டங்களில் பூஜ்யமாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது விரல்விட்ட எண்ணக்கூடிய அளவிற்கு உயர ஆரம்பித்துள்ளது.
ஆனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், சில நாட்களாக, கவனிக்கத்தக்க அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.
தற்போதைய நிலையில், தமிழகத்தில் BA4, BA5 போன்ற உருமாறிய கொரோனா வைரஸ்களின் தாக்கம்தான் அதிகம் இருக்க வாய்ப்பு என மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
தற்போது பரவும் வைரஸ் என்பது இரண்டாவது அலை போல் உயிர்க்கொல்லி அலையாக இருக்காது என்றாலும், பரவுதல் வேகம் அதிகமாக இருக்கும் என பொது எச்சரிக்கை மருத்துவ நிபுணர்களால் கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தை விட அதிக அளவில், கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கோவிட் 19 வைரஸ் பாதிப்பு, ஜூன் 1-ம் தேதியில் இருந்தே, அதிகரித்து வருகிறது.
இதைச் சுட்டிக்காட்டி, உடனடியாக தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கக்கோரி, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.