கொரோனா பரவல்- பிரித்தானியாவின் தற்போதைய நிலை! ஈழத்தமிழ் பெண் மருத்துவர் கிருஷ்திகா நகுலேஸ்வரனின் பிரத்யேக பேட்டி
கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த உலக நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் பிரிட்டன் உள்ளது. பிரிட்டனில் பதிவான புதிய உருமாறிய கொரோனாவால் பாதிப்புகளும் மரணங்களும் அதிக அளவில் பதிவாகியுள்ளன. கொரோனா தொடர்பான பொதுவான சந்தேகங்களுக்கு லண்டனில் பணியாற்றி வரும் மருத்துவர் கிருஷ்திகா நகுலேஸ்வரன் பதில் அளித்தார்.
மேலும் கொரோனா முன்களத்தில் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு கொண்டு வந்த ஊரடங்கை முதலில் தளர்த்திய நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.
இதனால் தான் அங்கு கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் மிக விரைவாகவும், தீவிரமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துவிட்டாலும் கொரோனா பரவல் முற்றிலுமாக கட்டுக்குள் வருவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும் என சொல்லப்படுகிறது. மக்கள் மத்தியிலும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு தயக்கம் நிலவுகிறது.
கொரோனாவுக்கு தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம், கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் உள்ள பாரபட்சங்கள் குறித்தும் மருத்துவர் கிருஷ்திகா நகுலேஸ்வரன் பகிர்ந்து கொண்டார். மிக முக்கியமாக பிரிட்டனில் உளரீதியாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை கவனித்து வரும் போது மருத்துவர்களும் உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
அத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து தொற்றுநோயுடன் போராடி வரும் மருத்துவர்கள், கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக மற்ற நோய்களுக்கான உதாரணத்திற்கு, டயாலிசிஸ், இதயநோய்கள் போன்றவற்றிற்கான சிகிச்சைகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள மக்கள் பயப்படுகின்றனர்.
இதற்கிடையே கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளும் மக்களின் பயத்தை மேலும் அதிகரிக்கின்றன, கடுமையான பரிசோதனைகளுக்கு பின்னரே தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வரும் பட்சத்தில், அவரை குணப்படுத்துவது எளிது, தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் போது சுவாசம் தடைபடுமானால் இறப்பை சந்திக்க நேரிடும்.