கொரோனா தடுப்பூசி போட்டது காரணமா? காய்ச்சலால் உயிரிழந்த இளம்பெண் மருத்துவரின் மரணத்தில் திடீர் திருப்பம்
மதுரையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவி உயிரிழந்ததற்கும், தடுப்பூசிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதுரை கல்லூரியில் படித்து வரும் மாணவி ஹரிஹரிணி(வயது 26), கடந்த பிப்ரவரி 5ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் கடும் காய்ச்சலால் அவதிப்பட, இவருடைய கணவரும் மருத்துவ மாணவர் என்பதால் வலி நிவாரண ஊசி போட்டு விட்டார். இருப்பினும் ஹரிஹரிணியின் உடல்நிலை மோசமடைய, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர், எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தடுப்பூசி போட்டதே இவரது மரணத்துக்கு காரணம் என தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் மதுரை மருத்துவ கல்லூரி டீன் சங்குமணி கூறுகையில், ஹரிஹரிணி மரணத்துக்கும், தடுப்பூசிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. இதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன, சமூகவலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜூன்குமார் கூறியதாவது, மாணவி எடுத்துக் கொண்டதாகக் கூறப்படும் வலிநிவாரண தடுப்பூசியை சுகாதாரத் துறையில் தடை விதித்துள்ளோம்.
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள், பொதுவாக வலி நிவாரண ஊசிகளை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.