தமிழகத்தில் தலை தூக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு - திருப்பி அனுப்பப்படும் பொதுமக்கள்
விருதுநகரில் தடுப்பூசி குறைபாட்டால் திருப்பி அனுப்பப்பட்ட பொதுமக்கள். விருதுநகரில் இன்று தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தடுப்பு முகாமில் தடுப்பூசி குறைபாட்டினால் பொது மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் உயிரிழப்பை தடுக்கவும் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது.
அதன்படி தமிழகமெங்கும் நகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று விருதுநகரில் உள்ள கே.வி.எஸ் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் போதுமான அளவு தடுப்பு ஊசி இல்லாத காரணத்தினால் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர்.
பின்னர் 1 மணி நேரம் கழித்து கன்னி சேரிப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து தடுப்பூசிகள் கொண்டு வரப்படுவதாக அலுவலர்கள் தெரிவித்த நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர்.
எனினும் அங்கிருந்து வந்த தடுப்பூசியும் போதுமானதாக இல்லாததால் காத்திருந்த பொதுமக்களை அலுவலர்கள் திருப்பி அனுப்பினர். தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருந்த நிலையை பார்க்கும் பொழுது கொரோணா தடுப்பதற்குப் பதிலாக நோய்தொற்றினை பரப்பும் இடமாக காட்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இது போன்று பொதுமக்களை கூட்டம் சேர்ப்பதற்கு பதில் முன்னேற்பாடக டோக்கன் முறையில் குறிப்பிட்ட நபர்களை வரவழைத்து தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.