கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கும் தயார்.. தடுப்பூசி போட்டுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
இதனையடுத்து, தமிழகத்தில் 1.03.2021 இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியிருக்கிறது.
அதனடிப்டையில், மாவட்டங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசிபோடும் பணியை முறையாக மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு, முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ‘பான் கார்டு’ உள்ளிட்டவைகள் கொண்டு ‘கோவின்’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். பயனாளிகள், Cowin செயலியைப் படுன்படுத்தி, cowin.gov.in-இல் மொபைல் நம்பரை உள்ளிடவும்.
கணக்கு தொடங்குவதற்கான ஓடிபி எண் கிடைத்தவுடன், அதை உள்ளிட்டு பெயர், வயது, பாலினம், அடையாள அட்டையை உள்ளிடவும். வாக்காளர் அட்டை, பான் அட்டை, ஆதார் அல்லது பென்ஷன் ஆவணத்தை அடையாளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
45 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், இணை நோய் இருப்பதற்கான சான்றையும் உள்ளிடவும். தடுப்பூசி மையத்தையும், தேதியையும் தேர்வு செய்துகொள்ளவும். ஒரு மொபைல் எண்ணில் 4 அப்பாய்ட்மெண்ட்கள் வரை பதிவுசெய்ய முடியும். பதிவு செய்யாதவர்கள் நேரில் சென்றும் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.