கொரோனா தடுப்பூசி எல்லோருக்கும் செலுத்த முடியாது - மத்திய அரசின் முடிவால் சர்ச்சை
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. பிப்ரவரி மாதம் வரை படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மார்ச் மாதத்திலிருந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக தினசரி 1 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
உலகளவில் தற்போது இந்தியாவில் தான் தினம்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால் கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இதில் புதிய கட்டுப்பாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கின்றன.
அதே சமயம் இந்தியாவில் தற்போது 8 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது முன்கள பணியாளர்களுக்கும் 45 வயதைக் கடந்தவர்களுக்குமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தற்போது 40 வயதுக்கும் குறைவானவர்களிடத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனால் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என்கிற குரல்கள் வலுத்துள்ளன.

இந்நிலையில் இது தொடர்பான கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த இந்தியாவின் கொரோனா தடுப்பு பிரிவின் தலைவர் வீ.கே.பால், "மிகவும் சிக்கலான நிலையில் உள்ளவர்களை பாதுகாக்கவே தடுப்பூசி.
கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு தான் செலுத்த முடியும்.. தடுப்பூசி வேண்டுகிறவர்களுக்கு எல்லாம் செலுத்த முடியாது" எனப் பதிலளித்திருந்தார்.
இந்த கருத்து தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.