நடமாடும் காய்கறி வாகனம் ஓட்டுநர் மற்றும் விற்பனையாளருக்கு கொரோனோ பரிசோதனை...
பூந்தமல்லியில் கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் காய்கறி வாகன ஓட்டுநர் மற்றும் விற்பனையாளருக்கு கொரோனோ பரிசோதனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கொரோனோ நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு ஒரு வார தளர்வில்லா முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இதனால் பூந்தமல்லியில் மளிகை கடைகள், காய்கறி மற்றும் பழங்கள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வீடுகள்தோறும் நகராட்சி சார்பில் காய்கறி வாகனம் மூலம் காய்கறி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
அதன்படி பூந்தமல்லி நகராட்சி சார்பாக நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
காய்கறி வாகன ஓட்டுநர் மற்றும் காய்கறி விற்பனை செய்பவர் என இரண்டு பேருக்கும் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே காய்கறி விற்பனை செய்வதற்கு அனுமதிக்கபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.