கொரோனா பரவலை தடுக்க ரூ.59 கோடி ஒதுக்கீடு - ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59 கோடி ஒதுக்கீடு செய்து ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,51,362 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் அதிகமாக பரவியிருக்கும் சூழலில் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருப்பினும், பாதிப்பு குறைய வில்லை. இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல் அரசு கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.59 கோடி ஒதுக்கி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.