கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது - மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மார்ச் மாதத்தில் இருந்து அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா மின்னல் வேகத்தில் பரவில் தற்போது தினசரி 1 லட்சம் பாதிப்புகள் பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்புகளோடு சேர்த்து மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
தற்போது சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தின் இறுதியில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் உச்சத்தை எட்டி அதன் பின்னர் படிப்படியாக குறையும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 8 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த வேகம் போதாது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது அத்தியாவசிய முன்கள பணியில் உள்ளவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் மத்திய அரசு தடுப்பூசியின் ஏற்றுமதியை குறைத்துவிட்டு உள்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
தற்போது தடுப்பூசி செலுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு தான் தீர்மானித்து வருகிறது. இதனால் தான் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசியை முதியவர்கள் மற்றும் இடநெருக்கடி மிகுந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று செலுத்த வேண்டும் என்கிற மகாராஷ்டிர அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
கொரோனா பரவல் மற்றும் மரணங்கள் அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா மத்திய அரசு தடுப்பூசி தொடர்பான முடிவுகளை மாநில அரசுகளிடம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. தற்போதைய இரண்டாம் அலையில் 20 - 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனால் மத்திய அரசு அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் 25 வயது கடந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்திய மருத்துவ கழகம் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஏப்ரல் 8-ம் தேதி கொரோனா பரவல் தொடர்பாக அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதில் தடுப்பூசி செலுத்துவதற்கான விதிகளை தளர்த்துவது, மீண்டும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.