கொரோனா பரவல் உச்சம்: இந்திய பயணிகளுக்கு தடை விதித்த நாடு.!
இந்தியாவில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 11 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. தற்போது உலகிலே இந்தியாவில் தான் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
கொரோனாவின் இரண்டாம் அலை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களுடன் அவசர ஆலோசனை நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 11 முதல் 28 வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதியில்லை என நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இந்த தடை தற்காலிகமானது என்றும் கொரோனா பரவலை பொறுத்து மாற்றிக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை பெரும் பாதிப்புகள் இல்லாமல் கட்டுப்படுத்திய நாடுகளுள் நியூசிலாந்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.