கொரோனா பரவல்- தேவையின்றி வெளியே வர வேண்டாம்- மக்களுக்கு வேண்டுகோள்
கோவையில் மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது - கோவை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் மீண்டும் முககவசங்கள் மக்கள் அணிந்து செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
முககவசங்கள் அணியாமல் வருகின்ற மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வணிக வளாகங்கள், திரையரங்குகள், போன்ற வர்த்தக இடங்களில், தினம் வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கப்படும். யார் யார் வருகிறார்கள். அவர்கள் முக கவசம் அணிந்து வருகிறார்களா? அவர்களின் உடல் பரிசோதனை எவ்வளவு என்பது குறித்தான அனைத்து தகவல்களையும் முறையாக பதிவு செய்து பாதுகாக்க பட வேண்டும்.

கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதனை மீறுகின்ற அனைத்து நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். கடைகளில் முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது கடைகளை மூட உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்படும்.
பொது மக்கள் வெளியூர் பயணங்கள், தேவையின்றி வெளியே செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை கூட இணைய தளம் மூலம் வாங்கி பயனடைந்து கொள்ளலாம் என்று பேசினார்.