இரு மடங்காக எகிறும் கொரோனா பரவல்; முகக்கவசம் அவசியம் - மக்களே உஷார்!
கொரோனா தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ளதால் அச்சம் எழுந்துள்ளது.
கொரோனா தொற்று
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸானது பின்னர் உலகையே ஆட்டி படைத்தது. முகக் கவசம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவற்றின் பாதிப்பு குறைந்தது.
ஆனால், தற்போது சிங்கப்பூர், சீனா என பல்வேறு நாடுகளில் கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில், ஜே.என்.1.1, எக்ஸ்.பி.பி., பி.ஏ.2 உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று பரவி வருகிறது.
முகக்கவசம் கட்டாயம்
தினசரி பாதிப்பு 20 என்று இருந்த நிலையில் 40 என இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 28ம் தேதி முதல் இதுவரை, ஐந்து பேர் வரை உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும் பொது சுகாதாரத்துறைஅறிவுறுத்தி உள்ளது. மேலும், இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், சில மாதங்களாக கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது.
ஆங்காங்கே ஓரிருவர் பாதிக்கப்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படவில்லை.
தற்போது தொற்று பாதிப்பு அதிகரிப்பதுடன், நாள்பட்ட இணை நோய் உள்ளவர்கள் உயிரிழக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
குறிப்பாக, புத்தக கண்காட்சி, சந்தை பகுதிகள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணிவதன் வாயிலாக தொற்றை கட்டுப்படுத்த முடியும். மேலும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.