ராமநாதபுரத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா மரணங்கள்
ராமநாதபுரத்தில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் கொரோனா மரணம், மின்மயானத்தில் தகனம் செய்வதற்காக வரிசைப்படி உடலை அடுக்கி வைத்திருக்கும் அவல நிலை.
கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படும் அதேவேளையில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தை பொருத்தமட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்பொழுது 3163 பேர் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த மூன்று தினங்களாக படிப்படியாக குறைந்து 200க்கும் குறைவாக வந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை நேற்றைய தினம் மேலும் அதிகரித்து 300ஐ தாண்டி பதிவானது.
இது ஒருபுறமிருக்க நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் நாளொன்றுக்கு ராமநாதபுரத்தில் மட்டும் 8 முதல் 10 பேர் வரை இருப்பதால் உடல்களை தகனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காலை துவங்கி நள்ளிரவு வரை அள்ளி கண்மாய் சுடுகாட்டு பகுதியில் உடல்கள் தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளது. மேலும் அங்கு உடல்களை எரியூட்டுவதற்கு போதிய நேரம் இல்லாமல் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அவலமும் நிலவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.