கொரோனா வைரசால் இந்திய குழந்தைகளின் உடல்நலம், மனநலம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது - யுனிசெப் தகவல்

corona children mental
By Jon Mar 08, 2021 12:39 PM GMT
Report

கொரோனா வைரசால் இந்திய குழந்தைகளின் உடல்நலம், மனநலம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.சர்வதேச குழந்தைகள் நல நிதியம் (யுனிசெப்) தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நல நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைகள் கல்வி பாதிக்கப்பட்டது.

குழந்தைகள் தங்கள் சகாக்களுடன் கலந்துரையாடுவது குறைந்தது. இது பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் 5 கோடி குழந்தைகள் தொற்று நோய்க்கு முன்பே மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து உலக அளவில் ஏழு குழந்தைகளில் ஒருவர் அல்லது 33.2 கோடி குழந்தைகள் குறைந்தபட்சம் 9 மாதங்களுக்கு வீட்டிலேயே தங்க நேரிட்டது.

இது அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு உளவியல் ஆதரவு மிகவும் அவசியம். குழந்தைகளும் அவர்களை பராமரிப்பவர்களும் மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றில் இருந்து விடுபட உதவும் கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும்.

கொரோனா காலத்தில் இந்தியாவில் குழந்தைகளுக்கு உளவியல் ஆதரவு அளிக்க 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களுக்கு யுனிசெப் பயிற்சி அளித்தது.

  கொரோனா வைரசால் இந்திய குழந்தைகளின் உடல்நலம், மனநலம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது - யுனிசெப் தகவல் | Corona Severely Mental Health Children Unicef

17 மாநிலங்களில் 4,46,180 குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உளவியல் ஆதரவு அளிக்கப்பட்டது. 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அரசு சலுகைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் பெறுவதில் யுனிசெப் துணை நின்றது” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.