ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரன் இனி ஒலிக்க வேண்டாம் – அரசு உத்தரவு!
ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரன் இனி ஒலிக்க வேண்டாம் என்று மணிப்பூர் மாநில அரசு ஆம்புலன்ஸ் இயக்குவோருக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டிச் செல்கிறது. மனித உயிரிழப்புகள் நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன.
ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இறந்தவர்களைப் புதைக்கக் கூட இடம் இல்லாமல் மயானங்களில் பிணங்கள் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன. தற்போது எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ்கள் இங்கும், அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
நகரங்கள் முழுவதும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலி மக்களுக்கு ஒருவித பீதியை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் பொதுமக்கள் அனைவரும் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இதைத் தவிர்க்கும் வகையில், மணிப்பூர் மாநில அரசு ஆம்புலன்ஸ் இயக்குவோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
ஆம்புலன்ஸ்களின் சைரன் ஒலி பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பீதியை உருவாக்குகிறது. மேலும் இப்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகன நெரிசலும் இல்லை. எனவே, ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரனை இனி ஒலிக்க வேண்டாம். சாலைகள் மூடப்பட்டிருந்தாலோ அல்லது வாகன நெரிசல் இருந்தால் மட்டுமே சைரனை ஒலிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.