சிக்கலில் சீனா ... மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : பீதியில் பொதுமக்கள்
சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் கடும் பேரழிவை ஏற்படுத்தியதோடு தற்போது ஒமிக்ரான் வைரஸாக உருமாற்றம் அடைந்துள்ளது.
ஆனால் சமீபகாலமாக மீண்டும் டெல்டா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் பாதிப்பு சீனாவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 29 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் 71 பேர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 19 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன்மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,644 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது