மறுபடியும் லாக்டவுனா : தமிழகத்தில் கொரோனா தடுப்பு குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா 3வது அலை மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. 3 கொரோனா அலைகளால் தமிழகம் இதுவரை பாதிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதத்தில் கொரோனா 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 500ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 36 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு என்பது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இல்லாத நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025ஆக உள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளும் நிலையில் நாளை காலை 9 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி? பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தலாமா? உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.