திண்டுக்கலில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்
திண்டுக்கலில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் செய்துள்ள பணிகள் மற்றும் வரும் காலங்களில் தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உட்பட மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கையும் விரைந்து எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் வரும் காலங்களில் தேவைக்கு ஏற்ப படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திண்டுக்கல் பகுதியைப் பொறுத்தவரை திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டை தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளதோடு, இரண்டு தனியார் பள்ளிகளில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் சாதாரண படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதே சமயம் சிகிச்சைக் கட்டணம் தொடர்பாக அரசின் உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.