பாதி ஆட்டத்தில் நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி - ரத்து செய்யப்பட்ட போட்டி
ஜூனியர் ஆசிய கோப்பை யு-19 கிரிக்கெட் போட்டி தொடரில் நடுவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஜூனியர் ஆசிய கோப்பை யு-19 கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின. இந்த தொடரின் கடைசி லீக் போட்டியான இதில் வங்காளதேச அணி முதலில் பேட் செய்ய தொடங்கியது.
அந்த அணி 32.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்திருந்த போது, நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. போட்டிக்கு முன்பு வீரர்கள், பயிற்சியாளர்கள் , நடுவர்கள் என அனைவருக்கும் வழக்கம்போல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. போட்டி நடந்து கொண்டு இருக்கும்போது அதன் முடிவுகள் வந்துள்ளன. இதில் நடுவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஆட்டம் ரத்து செய்யப்படடு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நாளை நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியா-வங்காளதேசம், பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன.
இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் இரண்டு நடுவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ், இருவரும் பாதுகாப்பாக உள்ளனர், இருவருக்கும் வழக்கமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்க ப்பட்டு வருகிறது. ரிசல்ட் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.