திருமண கறி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா உறுதி
தஞ்சாவூரில் திருமண கறி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாப்பிள்ளை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை தடுக்க நாளை முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ராஜா என்பவரின் திருமணம் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி கறி விருந்து விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த சில தினங்களில் காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால கறி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் முடிவில் மாப்பிள்ளை ராஜா உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.