கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஆறு பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு - அச்சத்தில் மக்கள்
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஆறு பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா மற்றும் இணை நோய்களுடன் நள்ளிரவில் அடுத்தடுத்து சிகிச்சைக்கு வந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கடந்த இரு நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுமார் எட்டு மணியளவில் உயிரிழந்தார்.
அதனையடுத்து நள்ளிரவு முதல் இன்று காலை வரை கொரோனா அறிகுறிகளுடன் சளி பரிசோதனை எடுக்காமல் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு அவரச சிகிச்சைக்கு வந்த ஐந்து ஆண்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
நள்ளிரவில் உயிரிழந்தவர்கள் முச்சு தினறல் ஏற்பட்டு இறந்தார்களா? அல்லது வேறு இணை நோய்களால் இறந்தார்களா என்பது குறித்து மாவட்ட சுகாதார துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு நடத்தி போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு உள்ளதாக தெரிவித்த நிலையில் அடுத்தடுத்து ஐந்து பேர் இறந்தது ஆக்சிஜன் பற்றாக்குறையாலா அல்லது சிகிச்சை பலனின்றியா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை முதல் இன்று காலை வரை அடுத்தடுத்து ஆறு நபர்கள் உயிரிழந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்கள். மேலும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க அரசு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.