கொரோனா சிகிச்சை என்கிற பெயரில் மோசடி - கோவையில் அம்பலம்

India Corona Tamil Nadu Coimbatore
By mohanelango Apr 20, 2021 07:57 AM GMT
Report

கோவை சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனை கொரொனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மையமாக உள்ளது. இங்கு 680 படுக்கைகள் உள்ளன.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க பலரும் தயங்கும் நிலையில், இதை பயன்படுத்தி கட்டண உதவியாளர்கள் என்ற பெயரில் ஏராளமான நபர்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் வலம் வருவதாக புகார்கள் எழுந்தன.

இவ்வாறு சட்ட விரோதமாக செயல்படுபவர்கள் குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் இருந்த 17 பேரை வெளியேற்றினர்.

மேலும் பாலாஜி என்ற கட்டண உதவியாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொள்ள நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கட்டணம் பெற்றுக்கொண்டு செயல்பட்டு வந்ததும் இவர்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்து இருந்ததும் தெரியவந்தது.

மேலும் பாலாஜியிடம் கட்டண உதவியாளர்களை நியமித்து அனுப்பி வைக்கும் ஏஜென்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.