கொரோனாவால் உயிரிழந்த நபர்.. உடலை ஒப்படைக்க பத்திரம் எழுதி வாங்கிய தனியார் மருத்துவமனை

corona body patient death document
By Praveen May 05, 2021 11:01 PM GMT
Report

மதுரையில் பாரதி என்ற தனியார் மருத்துவமனையில் 2 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றுக் கொண்டு கொரோனா சிகிச்சைக்கு அனுமதியளிக்கப்பட்டவர் உயிரிழந்த நிலையில் மீதிப்பணத்திற்காக 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டு உடலை ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மதுரையில் நாளுக்குநாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகின்றது. திங்கட்கிழமை ஒரே நாளில் 477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் சிகிச்சை பலனின்றி 16 பேர் இறந்தனர். இதுவரை 4444 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி ஹாலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள புதூர் பகுதியில் இருக்கும் பாரதி கருத்தரித்தல் மையம் மருத்துவமனையின் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்ட்டில் நாகேந்திரன் அவரது மனைவி சத்யா, மகள் காவியா ஆகியோர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நாகேந்திரனின் மனைவி மற்றும் மகள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

நாகேந்திரனுக்கு தொற்று பாதிப்பு அதிகமானதால் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பேக்கேஜ் சிஸ்டம் என கூறி மருத்துவமனை நிர்வாகம் நோயாளியின் உறவினர்களிடம் பேசி முன்பணமாக 2 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் இறந்தவரின் உடலைத் தர வேண்டும் என்றால் மீதி பணம் ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்தினால் தான் தருவோம் என கறாராக கூறியுள்ளனர். தங்களிடம் தற்போது பணம் இல்லை என இறந்த நாகேந்திரனின் உறவினர் கூற மீதி பணத்திற்கு ஒரு மாத தவணையில் கட்டுவதாக 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி கொடுங்கள் உடலை தருகிறோம் என கூறி பத்திரத்தை எழுதிக் கையெழுத்திட்டு வாங்கி கொண்டு உடலை கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது.

ஏற்கனவே தாய், மகள் இருவருக்கும் 5 லட்சம் ரூபாய்க்கும் மேலாக கட்டணம் வசூலித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தாங்கள் சொல்லும் ஆம்புலன்சில் தான் உடலை கொண்டு செல்ல வேண்டும் என கூறி அவர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கறந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் அதிகபட்சமாக 2 1/2 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ள நிலையில் கொரோனா தொற்றை வைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, உயிரை பணையம் வைத்து நோயாளிகளை காப்பாற்றி வருகிறோம் என்றனர். தற்பொழுது மதுரையில் ஆக்சிஜன் சரியாக கிடைக்காததால் மற்ற மாவட்டங்களில் இரு மடங்கு விலை கொடுத்து ஆக்சிஜன் வாங்கி வந்து நோயாளிகளை காப்பாற்றி வருவதாகவும், பதினான்கு நாட்களும் மருத்துவமனைக்கு உறவினர்கள் யாருமே வராத சூழ்நிலையில் நாங்களே அனைத்து உதவிகளும் செய்து சேவை அளித்ததாகவும், மீதி பணத்தை கட்ட கூறியதும் இறந்தவரின் உறவினர்கள் தங்களை தகாத வார்த்தையில் பேசியதாகவும் மருத்துவர் ஆழ்வார் கூறினார்.