கொரோனா காலத்தில் பயிர் சாகுபடியில் சாதனைப்படைத்த விவசாயிகள்

corona farmers record pandemic crops
By Praveen Apr 28, 2021 09:11 PM GMT
Report

 கொரோனா காலத்திலும், வேளாண் பயிர்களை அதிகம் சாகுபடி செய்து, தமிழக விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர்.

வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில், 15 லட்சத்திற்கும் மேலான பெண் விவசாயிகள் உட்பட, 79.3 லட்சம் விவசாயிகள் உள்ளனர். இவர்கள், 1.47 கோடி ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர். கொரோனா பரவலை தொடர்ந்து, தமிழகத்தில், 2020 மார்ச் முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்த காலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ள, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பயனாக, 2020 - 21ம் ஆண்டில், 1.11 கோடி ஏக்கர் பரப்பளவில், வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. நெல் பயிர்கள் மட்டும், 50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இது, 2019 - 20ம் ஆண்டை காட்டிலும், 3.29 லட்சம் ஏக்கர் அதிகம்.இதேபோல, சிறுதானியங்கள், 24.4 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும், 86 ஆயிரம் ஏக்கர் அதிகம். இவை உட்பட, மொத்தமாக உணவு தானியங்கள், 94.6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இது முந்தைய ஆண்டை விட, 4.09 லட்சம் ஏக்கர் அதிகம்.இதுமட்டுமின்றி, எண்ணெய் வித்துகள் 11.6 லட்சம் ஏக்கரிலும், பருத்தி, 2.57 லட்சம் ஏக்கரிலும், கரும்பு பயிர்கள், 3.04 லட்சம் ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திலும், தமிழக விவசாயிகள் சாகுபடியில் புதிய சாதனை படைத்துள்ளதால், வேளாண் விளைபொருட்கள் விலை ஏற்றம் தடுக்கப்பட்டு உள்ளது.