கொரோனா சீனாவின் வூஹானில் தோன்றியதா? அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய ஆவணம் கசிந்தது
உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் தற்போது வரை 17 கோடி பாதிக்கப்பட்டுள்ளனர். 35 லட்சம் பேர் உயிரழந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று இன்று உலகில் கால் பதிக்காத இடமே இல்லை என்கிற அளவில் அமேசான் மழைக்காடுகள் தொடங்கி அந்தமானில் மனிதர்களே பிரவேசிக்காத தீவுகள் வரை பரவியுள்ளது.
கொரோனா ஏற்படுத்தியுள்ள வடுக்களிலிருந்து உலக நாடுகள் மெல்ல மீண்டு வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போர் என்பது இந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிடுவதாக தெரியவில்லை.
கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பான சர்ச்சை தற்போது வரை நீண்டு வருகிறது. சீனாவில் வூஹானில் உள்ள விராலஜி ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா பரவியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.
இதே குற்றச்சாட்டை பல்வேறு உலக நாடுகளும் முன்வைத்து வருகின்றன. கொரோனா வைரஸின் தோற்றும் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிற குரல்களும் எழுந்து வருகின்றன.
வூஹான் சென்று ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு குழு எந்த விதமான தகவல்களையும் வெளிக் கொண்டு வரவில்லை.
இந்த நிலையில் The Wall Street Journal பத்திரிகை அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கசிந்த அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய ஆவணங்களை அடிபப்டையாக வைத்து அந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தோன்றியதாக கூறப்படும் வூஹான் ஆய்வகத்தைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதமே கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது. சீனாவில் முதல் கொரோனா தொற்று டிசம்பர் 9, 2019 அன்று தான் பதிவாகியுள்ளது. டிசம்பர் 30, 2019 அன்று வூஹானில் தீவிரமான நோய் பரவுவதாக சீனா உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவித்திருந்தது.
கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றவில்லை, அமெரிக்காவில் மேரிலாந்தில் உள்ள இராணுவ ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் தோன்றியிருக்கும் என சீனா பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் பற்றி பதிலளித்துள்ள ஜோ பைடன் நிர்வாகம், உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்குள் முன்முடிவோடு எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறிவிட்டது.
கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பான சர்ச்சை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.