"அடுத்த 10 நாட்கள் மிகுந்த எச்சரிக்கை தேவை" - ராதாகிருஷ்ணன் அறிவுரை
தமிழகத்தில் மக்கள் அடுத்து 10 நாட்களுக்கு கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன தான் கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்தாலும் தமிழகத்தில் தற்போது வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. மாறாக மினி ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தாய் சேய் னால மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் வசதிகளோடு கூடிய படுக்கைகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மட்டுமே அரசு மூலம் ரெம்டெசிவர் மருந்து விநியோகம் செய்யப்படுவதாக கூறினார். கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவர் மருந்து அவசியம் இல்லை என்று கூறிய அவர், நோய் பாதித்த 30 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து தேவைப்படும் என விளக்கமளித்தார்.
மேலும் தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.