இனி ரயிலில் பயணம் செய்ய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியமாம்? - ரயில்வே வாரியம் விளக்கம்
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத உச்சமாக 1.31 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 780 பேர் உயிரிழந்துள்ளனர். மீண்டும் முழு ஊரடங்கு வருமா? என்று மக்கள் பயந்துகொண்டிருந்த நிலையில், பிரதமர் மோடி அதற்கு வாய்ப்பில்லை என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
இருந்தாலும், இரவு நேர ஊரடங்கு போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார். கொரோனாவின் 2ம் அலை பரவலால் ரயில் சேவை நிறுத்தப்படும் என்றும், ரயிலில் பயணிக்க வேண்டுமென்றால் பயணிகள் தங்களுக்கு கொரோனா இல்லை என உறுதிப்படுத்திய நெகட்டிவ் சான்றிதழை எடுத்துவர வேண்டும் என்றும் ரயில்வே வாரியம் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா பேசுகையில், ரயில் சேவையைக் குறைக்கவோ, நிறுத்தவோ எந்த திட்டமும் எங்களிடம் கிடையாது. அவ்வாறு வரும் செய்திகள் பொய்யானது. மக்கள் கூட்டம் அதிகரித்தால், உடனடியாக அந்தக் குறிப்பிட்ட தடத்தில் அதிகமான ரயில்களை இயக்க தயாராக இருக்கிறோம்.
தற்போது ரயில்களில் கூட்டம் இயல்பாகத்தான் உள்ளது. ரயில் சேவை குறித்து ஏற்கெனவே நாங்கள் அறிவித்துவிட்டோம். அதேபோல கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் தான் ரயிலில் பயணிக்க முடியும் என்று நாங்கள் தெரிவிக்கவில்லை. அது முற்றிலும் தவறான தகவல் என்றார்.