கையில் பணம் கொடுத்தால் தான் மருத்துவமனையில் அனுமதி..பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்

corona death money help reporters
By Praveen Apr 28, 2021 11:51 AM GMT
Report

வங்கிக் கணக்கில் பணமிருந்தும், கையில் ரொக்கமாக இல்லாத காரணத்தால் பெரும் தொற்றுக்கு உள்ளான பெண்ணை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்த தனியார் மருத்துவமனை நிர்வாகம்.சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மருத்துவமனைக்கு வெளியே உயிரை விட்ட பெண்.

உடலை அப்புறப்படுத்த யாரும் முன்வராத நிலையில், கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து செய்தியாளர்கள் உடலை அப்புறப்படுத்தினர். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரை சேர்ந்தவர் அஞ்சலி. பெரும் தொற்றுக்கு உள்ளான அஞ்சலியை குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அஞ்சலியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க ஒப்புக்கொண்ட நிர்வாகம் முதலில் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியது. அப்போது அவருடைய அக்கவுண்டில் மட்டுமே பணம் இருந்தது. எனவே போன்பே, கூகுள் பே அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்துகிறோம் அஞ்சலியின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் இங்கு ஒன்லி கேஸ் பேமெண்ட், நோ ஆன்லைன் பேமென்ட் என்று மருத்துவமனை ஊழியர்கள் கறாராக தெரிவித்துவிட்டனர்.

எனவே வேறு வழி இல்லாத நிலையில் பெரும் தொற்றுக்கு உள்ளான அஞ்சலியை மருத்துவமனையின் வெளியே உட்கார வைத்துவிட்டு, குடும்ப உறுப்பினர்கள் பணம் திரட்ட சென்றுவிட்டனர். மூன்று மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து பணம் திரட்டி கொண்டு மருத்துவ மனைக்கு வந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இடைப்பட்ட நேரத்தில் பணம் திரட்டுவதற்காக சென்ற குடும்ப உறுப்பினர்கள் பணத்துடன் வந்து தன்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பார்கள் என்று காத்திருந்த அஞ்சலி மருத்துவமனைக்கு வெளியே பரிதாபமாக மரணமடைந்தார். அவருடைய உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த உதவிகளை செய்ய யாரும் முன் வராத நிலையில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த செய்தியாளர்கள் ராஜேஷ்,ராஜன் ஆகிய இரண்டு பேர் கொரோனா பாதுகாப்பு உடையணிந்து மரணம் அடைந்த அஞ்சலி உடலை அவருடைய உறவினர்களுடன் சேர்ந்து இறுதி யாத்திரை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் உதவி தேவைப்படுபவர்களுக்கு ஓடோடி சென்று உதவ வேண்டும் என்ற மனநிலை கொண்ட மனிதர்களிடம் குடி கொண்டிருக்கும் மனிதநேயத்தை கொரோனா ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு சான்றாக விளங்கியது.