தமிழகத்தில் நுழைந்ததா ஒமிக்ரான் - சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி
சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது அது உருமாறி ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து, சர்வதேச வழித்தடங்களை தற்காலிகமாக மூட பல நாடுகள் முன் வந்திருக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை ஒமிக்ரான் வைரஸை தடுக்கும் வகையில் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி சர்வதேச விமான நிலையங்களிலும் புதிய விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டிருக்கின்றன.
பல நாடுகளிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பிறகு அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த இரண்டு விமானங்களில் 282 பயணிகள் வந்து சேர்ந்தார்க்ள.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மூன்றரை மணி நேரத்தில் முடிவுகள் பெறப்பட்டு பயணிகள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அப்போது, சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. தொற்று உறுதியான நிலையில், தஞ்சையை சேர்ந்த நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிவாரசு செய்தியாளர்களை பேசுகையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அது ஒமிக்ரான் வகை கொரோனாவா? என்பது குறித்து ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என்றார்.
