மனிதத்தை மறக்க செய்த கொரோனா ..ஆந்திராவில் அரங்கேறிய சோக நிகழ்வு!
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் கொரோனா. பெரும் தொற்றால் மரணம் அடைந்த தாயின் உடலை அடக்கம் செய்ய உதவி கிடைக்காமல் அல்லாடும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ,பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரியை சேர்ந்தவர் சுப்பம்மா.
இவருடைய மகன் கிரிதர். கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட சுப்பம்மா வீட்டிலிருந்த படியே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் உடல்நிலை மோசமடைந்து சுப்பம்மா மரணமடைந்தார்.
வீட்டில் இருந்து வெளியே வர இயலாத நிலையிலிருக்கும் கிரிதர் உறவினர்கள்,அதிகாரிகள் ஆகியோருக்கு தன்னுடைய தாயின் மரணம் பற்றி தகவல் அளித்து உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அவர் உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வரவில்லை. அதேபோல் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. எனவே நேற்று இரவு முதல் தற்போது வரை தன்னுடைய தாயின் உடலை அடக்கம் செய்ய அரசிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும் என்று வீட்டிற்குள்ளேயே அவருடைய உடலை வைத்து கொண்டு மகன் கிரிதர் காத்து கிடக்கிறார்.
கொரோனா பெரும் தொற்று மனிதர்களை மட்டுமல்லாமல் மனிதனிடம் காணப்படும் மனிதநேயத்தையும் மரணிக்கச் செய்து விட்டது என்பதற்கு உதாரணமாக உள்ளது இந்த நிகழ்வு