கொரோனா பரவல் - அரசு விதித்த கட்டுப்பாடுகள் - மதுரை சித்திரை திருவிழா நடைபெறுமா?
தமிழ்நாட்டில் கொரோனாவின் 2ம் அலை வேகமெடுத்து வருகிறது. இதனால், திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழா நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மதுரை கோவில் மாநகரம் என்று அழைக்கப்படுகிறது.
மதுரையில் பிரதான விழாவான சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வெகு சிறப்பாக நடைபெறும். இவ்விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட மக்களின் முக்கிய விழாவாக இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் முக்கியமானது ஆற்றில் அழகர் இறங்குவதுதான். அதிவும் அழகர் ஆற்றில் இறங்கும் போது என்ன பட்டு உடுத்துகிறார் என்பது அன்றைய தினத்தின் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு அறிவித்த நிலையில் பக்தர்கள் இன்றி இவ்விழா நடைபெற்று முடிந்தது. ஆனால், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்.15-ம் தேதி தொடங்க உள்ளது. வரும் ஏப்ரைல் 24ம் தேதி திருக்கல்யாணம், ஏப்ரல் 25-ம் தேதி தேரோட்டம், ஏப்ரல் 26ம் தேதி எதிர்சேவை, 27-ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவித்து அதை பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மாதிரி பக்தர்கள் யாரும் இல்லாமல் திருவிழா நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.