கொரோனா பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பினார் துரைமுருகன்!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா பிடியில் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் என பலர் சிக்கி தவித்து வருகின்றனர். முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கும் கூட கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு கொரோனாவின் பாதிப்பு அதிகமானதால், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. பின்னர், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
தற்போது துரைமுருகன் பூரணமாக குணமடைந்துள்ளார். இன்று அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொரோனா நெகட்டிவ் என்று வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ள துரைமுருகன் 14 நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.