18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இப்போதைக்கு தடுப்பூசி இல்லை - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
''தமிழக அரசு ஆர்டர் செய்துள்ள, 1.50 கோடி, 'டோஸ்' தடுப்பூசிகள் வந்தால் தான், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது துவக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்து, அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.பெரும் சவால்அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடித்தால் தான், தொற்று பரவலின் வேகத்தை குறைக்க முடியும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், கொரோனா தொற்று பரவலை குறைப்பது, பெரும் சவாலாக உள்ளது.
நாடு முழுதும் இன்று முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இணையதளத்தில் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்காக தமிழக அரசு, 1.50 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, 'ஆர்டர்' கொடுத்துள்ளது.
இதுவரை எவ்வளவு தடுப்பூசிகள் கிடைக்கும் என்ற தகவல், இன்னும் கிடைக்கவில்லை. கண்காணிப்புஆர்டர் கொடுத்த தடுப்பூசிகள் கிடைத்தால் தான், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடும் பணி துவக்கப்படும். தமிழகம் மட்டுமல்ல; பல மாநிலங்களிலும், இதே பிரச்னை உள்ளது. அரசு மருத்துவமனைகளை போல, அடுத்த, 10 நாட்களுக்கு, திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க, தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள், 50 சதவீத படுக்கைகளை, கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரில், 50 சதவீதம் பேர், வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனைகளுக்கு வரும், 30 சதவீதம் பேரில், 20 சதவீதம் பேர் தான், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்; 10 சதவீதம் பேர், கொரோனா கண்காணிப்பு மையத்தில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.'கள்ள சந்தையில் ரெம்டெசிவிர்; இது தான் இறுதி எச்சரிக்கை'சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:அரசு மருத்துவமனைகளை போல, தனியார் மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் தேவைகளை ஒருங்கிணைக்க, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குனர் சிவபாலன் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது. 'ரெம்டெசிவிர்' மருந்து விவகாரத்தில், நிறைய தவறு நடக்கிறது. தாம்பரத்தில் கள்ளச் சந்தையில் விற்றவர்கள் மீது, போலீசார் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் விற்கப்படும், அரசு மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து, கள்ளச் சந்தைக்கு செல்கிறது. பெரும்பாலும் கள்ளச் சந்தையில் விற்கப்படும் மருந்து, குஜராத், உ.பி.,யில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் விற்றால், காவல் துறை வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது, எங்களுடைய கடைசி எச்சரிக்கை. ரெம்டெசிவிர் முக்கியமான மருந்து தான். அந்த மருந்து அனைவருக்கும் தேவையில்லை. தனியார் டாக்டர்கள், தேவையானோருக்கு மட்டும் அந்த மருந்தை பரிந்துரை செய்ய வேண்டும். தேவையில்லாதோருக்கு பரிந்துரை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.ரெம்டெசிவிர் உற்பத்தி அதிகரிப்பால், இன்னும் ஒரு வாரத்தில், அந்த மருந்துக்கான தட்டுப்பாடு நீங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.