திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி: தேர்தல் பிரச்சாரங்கள் ரத்து
திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மகளிரணி தலைவருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக 89,000க்கும் அதிகமான பாதிப்புகளும் 700க்கும் அதிகமான மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருவதால் பாதிப்புகள் அதிகமாகலாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது திமுக எம்.பி கனிமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக நட்சத்திர பேச்சாளராக கனிமொழி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தார்.
தேர்தலுக்குப் பிறகு சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.