கொரோனாவால் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் உயிரிழந்தார்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியாவில் இதுவரை 2.87 லட்சம் பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
முதல் அலையின் போது இந்த மாதிரியான உயிரிழப்புகள் அதிகளவில் கிடையாது. ஆனால், தற்போது பரவி வரும் 2ம் அலையில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. கொரோனா பிடியில் சிக்கி பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் பஹாடியா (89) கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவருக்கு இரங்கல் தெரிவித்து, ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரு நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருக்கிறார்.
கடந்த 1980 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் முதலமைச்சராக ஜெகன்நாத் ஹரியானா பதவி வகித்துள்ளார். பீகார் மாநிலங்களில் ஆளுநராகவும் இவர் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.