டெல்லியில் தொடரும் கொரோனா அபாயம்- ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 பேர் உயிரிழப்பு
டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 20 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தியா கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,331 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 348 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில், நேற்று கொரோனா சிகிச்சை பெற்று வந்த 20 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவ இயக்குநர் டி.கே பாலூஜா கூறுகையில், 3.5 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அரசிடமிருந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு வந்தடைய வேண்டிய ஆக்சிஜன் டேங்கர் நள்ளிரவில்தான் வந்தது. ஆக்சிஜன் வந்தடையத் தாமதமானதால் 20 பேர் இறந்துள்ளனர் என்றார்.
இதுபோன்று மோல்சந்த் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மது ஹந்தா கூறுகையில், ‘எங்களிடம் அரை மணி நேரத்திற்கான ஆக்சிஜன் மட்டுமே உள்ளது என்று தழுதழுத்த குரலில் கூறினார்.