கொரோனா தொற்றால் அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்!
அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான குளித்தலை பாப்பா சுந்தரத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனடியாக அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
பாப்பா சுந்தரம் (86). கடந்த 1989ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயலலிதா அணி சார்பில் போட்டியிட்டு குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி கிடைத்தது.
இதனையடுத்து 1991ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் பாப்பா சுந்தரம் வெற்றி அடைந்தார். அதைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தோல்வி அடைந்தார்.
இருந்தாலும், 2001ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். அப்போது அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இறப்பிற்கு அதிமுகவினரும், முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.