கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குப்பையாக வீசி செல்லும் அவலம்
அரக்கோணத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை குப்பையில் வீசி செல்லும் அவலத்தை நகராட்சி கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நேருஜி நகர் பகுதியில் உள்ள அரக்கோணம் நகராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 சடலங்கள் வீசி சென்றிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய தமிழக அரசு விதிமுறைகளை விதித்துள்ள நிலையில் அரக்கோணம் நகராட்சி சார்பில் கொரோனாவால் உயிரிழிந்தவர்களுடைய உடல்களையும் பிற நோயால் உயிரிழிந்தவர்களுடைய உடல்களையும் சரிவர அடக்கம் செய்யாததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் நேருஜி நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான மின் மயானம் மற்றும் சுடுகாடு எதிரே அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டில் அரக்கோணம் அரசு மருத்துவமனை மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, சென்னை ஆகிய பிற மாவட்டங்களில் அரக்கோணத்தை சேர்ந்த நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகள் உயிரிழந்தவர்களை இங்கு அடக்கம் செய்து வருகின்றனர்.
நாளொன்றுக்கு 7 சடலம் மின்மயானத்தில் எரிக்கப்படுதாகவும் அப்பகுதியில் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சடலங்கள் அதிகரித்து வருவதால் அதனை சரிவர அடக்கம் செய்யாமல் கல்லறைப் பகுதியில் குப்பையாக வீசி செல்வதால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் நேருஜி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நடுவே உள்ள சுடுகாட்டில் அரக்கோணம் நகராட்சியின் அலட்சியத்தின் காரணமாக இதுபோன்ற சடலங்களை வீசி செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் நகராட்சியில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு சரிவர பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு விடுகின்றனர்.