கோவாக்சின் மாநிலத்துக்கு ரூ.600ம், தனியாருக்கு ரூ.1200 விலை நிர்ணயம்

corona rate covaxin fix biotech
By Praveen Apr 25, 2021 08:08 AM GMT
Report

தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் மருந்தின் விலையை நிர்ணயம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது பாரத் பயோடெக் நிறுவனம்.

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மாநில அரசுகளுக்கு ரூ.600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் 15 முதல் 20 டாலர்கள் வரை விற்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தான் மற்றொரு தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தனது கோவிஷீல்ட்டை மாநில அரசுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்தது.

இந்நிலையில் கோவாக்சின் விலையும் அதிகரித்து இருப்பது மக்களை சற்று கவலை அடையச்செய்துள்ளது. இது குறித்து பாரத் பயோடெக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறுகையில் கடந்த 25 ஆண்டுகளாக எங்களது முக்கிய நோக்கம் உலகிற்கு மலிவாக ,ஆனால் உலகத்தரம் வாய்ந்த சுகாதார தீர்வுகளை வழங்குவதாகும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், மத்திய அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக தொடர்ந்து வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

மேலும், மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளுக்கான செலவினத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.