உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

covid india coronavirus YogiAdityanath
By Irumporai Apr 14, 2021 08:29 AM GMT
Report

 உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது.

அதே சமயம் நோய் பரவலை கட்டுப்படுத்த , நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு விரைவுபடுத்தி வருகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரான யோகி ஆதித்யநாத் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே, யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பாஜக தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 5-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.