கொரோனா நோயாளிகள் இல்லாத நாளாக மாறிய சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட சிகிச்சையில் இல்லாத நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது.
உலகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று கடும் இன்னல்களை ஏற்படுத்தியது. கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு நாடுகளும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.
இந்தியாவும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் கடும் பாதிப்புகளை சந்தித்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்,
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பெட்டுகள் இல்லாமல் நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் வெளியில் காத்துகிடந்த நிகழ்வுகள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது.
கொரோனா தொற்று காலங்களில் அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வாழத்துக்கள் குவிந்து வருகிறது.